Tuesday, May 8, 2018

பால காண்டம். சர்க்கம் 1 - ஸ்லோகம் #2

பால காண்டம். ஸ்லோகம் #2

கோன்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஷ்ச வீர்யவான் |
தர்மஞஸ்ச க்ருதஞஸ்ச சத்யவாக்யே த்ருடவ்ரத: ||

பொருள்: 
இந்த உலகத்தில் சிறந்தவர் எனக் கருதப்படுபவர் யார்? அனைத்துவித நற்குணங்களையும் கொண்டவர் யார்? அனைத்து ஆயுதப் பயிற்சிகளும் பெற்று, எதிரிகளை வெல்லக்கூடிய வீரன் யார்? தர்மத்தை முழுமையாக அறிந்தவன் யார்? பெற்ற உதவிகளை நினைப்பவன், தத்வஞானி, ஆபத்து காலங்களிலும் சத்தியத்தைக் காப்பாற்றுபவன் யார்?

விளக்கம்:

அஸ்மின் லோகே - இந்த பூலோகத்தில்
சாம்பிரதம் - இந்த காலத்தில்
குணவான் - அனைத்து நற்குணங்களையும் கொண்டிருக்கும் ஒருவர்
க: - யார்?
வீர்யவான் - அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் கற்று, எதிரிகளை வெல்லக்கூடிய வீரன்
க: - யார்?
தர்மஞஸ்ச - ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லியவாறு அனைத்து வித தர்மங்களை அறிந்தவர் (யார்?)
க்ருதஞஸ்ச - தனக்கு செய்த அனைத்து தொந்தரவுகளையும் மறந்து, செய்த ஒரே ஒரு உதவியை நினைத்துப் பார்க்கும் நன்றியுள்ள ஒருவர் (யார்?)
சத்யவாக்ய: - எத்தகைய கஷ்டமான காலங்களிலும் உண்மையையே பேசுபவர் (யார்?)
த்ருடவ்ரத: - ஆபத்து காலங்களிலும் தீர்மானித்த தர்மத்தை விடாமல் நிலைநாட்டுபவர் (யார்?)

சிறப்புக் கருத்து:

தமது ஆசிரமத்திற்கு வந்த நாரதரிடம், வால்மிகி ரிஷி மிகவும் மரியாதையுடன், தமது கேள்விகளை முன்னெடுத்து வைக்கிறார். அடுத்த மூன்று ஸ்லோகங்களில் நாரதரிடம் வால்மிகி கேட்ட கேள்விகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. 

கோனு அஸ்மின் - என்னும் அமரகோச வாக்கியத்தின்படி ‘னு’ என்னும் சொல் கேள்வியைக் குறிக்கிறது. அஸ்மின் என்னும் சொல்லிற்கு பூலோகத்தில் என்று பொருள்.

சாம்ப்ரதம் - என்னும் சொல்லிற்கு நிகழ்காலம் என்று பொருள். வேறு உலகங்களில், அனைத்து நற்குணங்களுடன் கூடியவன் விஷ்ணு என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைப் பற்றி கேட்பது வால்மிகியின் அபிப்ராயம் இல்லை. பூலோகத்தில் சிறந்தவர் யார் என்று கேட்பதே வால்மிகியின் நோக்கமானதால், ‘அஸ்மின் லோகே’ என்று கேட்கிறார். மேலும், பூலோகத்திலும் வேறு காலங்களில், நரசிம்ம, வாமன, பரசுராம ஆகிய ஸ்ரீஹரியின் ரூபங்கள் சிறந்தவையாக இருந்தன என்ற விஷயம் வால்மிகி ரிஷிக்கு தெரிந்திருந்தது. ஆனால் அந்த காலத்தில் யார் சிறந்தவர்? என்று கேட்பது வால்மிகியின் நோக்கமாக இருந்ததால் சாம்ப்ரதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். 

குணவான் - சமுதாயத்தைப் பற்றிக் கேட்டு, பின்னர் அரசரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய குணங்களைப் பற்றி பின்னர் கேட்கிறார். 

‘கஸ்ச வீர்யவான்’ - க: என்னும் சொல்லை திரும்பத்திரும்ப பயன்படுத்தியிருப்பதால், தமக்கு கேள்வி கேட்பதில் இருக்கும் விருப்பத்தை தெரியப்படுத்துகிறார். ஆகையால், க: என்னும் இந்த  சொல்லையே ஒவ்வொரு குணங்களின் பின்னும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உலகத்தில், ஒரு மனிதனிடத்தில் குணங்கள் வந்து சேர்ந்தால் அவனிடம் மாற்றம் உண்டாகிறது. ஆனால் இங்கு மனிதனின் சம்பந்தத்தாலேயே குணங்களில் மாற்றம் உண்டாகியிருக்கிறது. இதைத் தெரியப்படுத்துவதற்காக, குணமுள்ள மனிதனை முதலில் கேட்டு, பின் குணங்களைப் பற்றி சொல்கிறார். 

ஒருவரது மனம் களங்கப்படும் சந்தர்ப்பங்கள் நிறைய வந்தாலும், அவரது மனம் களங்கப்படாமல் இருந்தால் அவர் வீரர் எனப்படுவார். இத்தகைய வீரர் யார்? அல்லது பல ஆயுதங்களை அடைந்து எதிரிகளை பந்தாடும் திறனுள்ள வீரர் என்கிறார். இத்தகைய வீரம் உள்ளவர் யார்?

தர்மஞஸ்ச - ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட அனைத்து வகை தர்மங்களையும் அறிந்தவர் யார்? அல்லது அலௌகிகமான புகழைப் பற்றி, சாதாரண மற்றும் விசேஷ ஞானத்தைப் பெற்றவர் யார்? ச என்னும் சொல்லை, பிறகு வருபவற்றுடன் சேர்த்துச் சொல்லவேண்டும். அதர்மத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் யார்?

க்ருதஞஸ்ச - செய்த உதவிகள் மிகக் குறைவாகவே இருந்தாலும், சந்தர்ப்பம் வரும்போது அதை நினைவு படுத்திக்கொள்பவர் யார்? இங்கிருக்கும் ‘ச’ சொல்லையும் பிறகு வருபவற்றுடன் சேர்த்துச் சொன்னால், செய்த பிரச்னைகளை நினைவில் வைத்துக் கொள்பவர் யார்? என்றும் வரும். 

சத்யவாக்ய: - ஆபத்தான நேரங்களிலும் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மையைப் பேசி, பொய் சொல்லாதவர் யார்? ராமாயணத்திலேயே பின்னர் இவ்வாறு வருகிறது. ‘அன்ருதம் நோக்தபூர்வம் மே ந ச வக்‌ஷ்யே கதாசன’ - இதுவரை பொய் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதில்லை. 

ந ஸ்மரத்யபகாராணாம் ஷதமப்யாத்மவத்தயா |
கதம்சிதுபகாரேண க்ருதேன்யைகேன துஷ்யதி ||

ஆத்மவத்தயா என்றால் தனக்கு ஆபத்து வரக்கூடிய நேரங்களில் என்றும் ஆத்ம என்றால் மனம் என்று பொருள் வருவதால் ஆத்மவான் என்றால் மனது உள்ளவன் என்று பொருள். எத்தகைய மனது?

தனக்கு 100 பிரச்னைகள் செய்திருந்தாலும் அதை நினைக்காமல், எப்போதோ செய்த ஒரே ஒரு உதவியை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியடையும் நல்ல மனதுடையவன். 

த்ருடவ்ரத: - நற்காரியங்களை செய்து முடிப்பேன் என்று சொல்பவர்களில் சிறந்தவர் யார்? தந்தை சொல்லை மீறாதவர், ஏகபத்னி விரதம் ஆகியவற்றை பின்பற்றுபவர் யார்? மிகக் கடினமான விரதங்களை செய்து முடிப்பவர் யார் என்று கேட்கிறார். பின்னர் வரும் ராமாயண ஸ்லோகமும் இங்கே நினைத்துக் கொள்ளலாம்.

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யம் த்வாம் வா சீதே சலக்‌ஷ்மணாம் |
நஹி ப்ரதிஞாம் சம்ஸ்ருத்ய ப்ராம்மணேப்யோ விசேஷத: ||


No comments:

Post a Comment

ಬಾಲ ಕಾಂಡ ಸರ್ಗ 1 ಸ್ಲೋಕ 5&6

ನನ್ನ ಈ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲು ತಾವೊಬ್ಬರೇ ಸಮರ್ಥರು ಏತದಿಚ್ಛಾಮ್ಯಹಂ ಶ್ರೋತುಂ ಪರಂ ಕೌತೂಹಲಂ ಹಿ ಮೇ   | ಮಹರ್ಷೇ ತ್ವಂ ಸಮರ್ಥೋ ಽ ಸಿ ಜ್ಞಾತ...