Friday, May 11, 2018

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் 5&6

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் #5

ஏததிச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |
மஹர்ஷே த்வம் சமர்த்தோSபி ஞாதுமேவம்விதம் நரம் ||

பொருள்: 

ரிஷிகளில் சிறந்தவரான நாரதரே! இத்தகைய நற்குணங்களைக் கொண்டவரான மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தாங்கள் அந்த மனிதரைக் குறித்து முழுவதுமாக அறிந்திருக்கிறீர்கள். தயவு செய்து எனக்கு அவரைப் பற்றி தெரிவியுங்கள்.

விளக்கம்:

ஹே மஹர்ஷே = முனிவர்களில் சிறந்தவரான நாரதரே
த்வம் = தாங்கள்
ஏவம் விதம் நரம் = இத்தகைய நற்குணங்களைக் கொண்டவரான சிறந்தவரை
ஞாதும் = தெரிவியுங்கள்
சமர்த்தோSஸி = முழுவதுமாக அறிந்திருக்கிறீர்கள்.
அஹம் = நான்
ஏதத் = இந்த சிறந்த மனிதரின் குணங்களின் சிறப்புகளை
ஸ்ரோதும் = கேட்பதற்கு
இச்சாமி = விருப்பப்படுகிறேன். 
ஹி = ஏனென்றால்
மே = எனக்கு
பரம் கௌதூஹலம் = மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். 

(ஸ்லோகத்தின் முதற்பாதியில் காவிய அலங்காரத்தையும், பிற்பாதியின் காவியலிங்க அலங்காரத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் என்று அறியவேண்டும்).

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் #6

ஸ்ருத்வா சைதத் த்ரிலோகஞே வால்மீகேர்னாரதோ வச: |
ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரக்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||

பொருள்:

மூன்று உலகங்களின் ஞானத்தையும் பெற்றிருக்கும் நாரதர், வால்மிகி ரிஷியின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரது கேள்விகளை பாராட்டி, பதில் சொல்கிறேன் கேள் என்று சொல்லி, வால்மிகியை தன் எதிரில் அமர்த்தி, பதில் அளிக்கத் துவங்கினார். 

விளக்கம்:

த்ரிலோகக்ஞ = மூன்று உலகங்களையும் அறிந்தவர்
நாரத: = நாரத மகிரிஷி
வால்மிகே: = வால்மிகியின்
ஏதத் = இந்த கேள்வியை
ச = மனதிற்குள் இருந்ததையும்
ஸ்ருத்வா = கேட்டு அறிந்து 
ப்ரஹ்ருஷ்ட: = மிகவும் மகிழ்ச்சியடைந்து
வச: ஸ்ரூயதாம் = என் பேச்சினைக் கேளுங்கள்
இதி = இப்படி
ஆமந்த்ர்ய = எதிரில் அமர்த்தி
வாக்யம் = பதில் அளிக்கும் விதமாக
அப்ரவீத் = தெளிவாகக் கூறினார்

சிறப்புக் கருத்து:

’தத்விக்ஞானார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத்’ என்பதைப்போல, ஞானத்தை அடைவதற்காக குருவைத் தேடி சிஷ்யன் போகவேண்டும் என்பது அதர்வண உபநிஷத்தில் வரும் வாக்கியம். ஆனால் இங்கு குருகளான நாரதரே சிஷ்யரான வால்மிகியைத் தேடி வந்திருக்கிறார். சிஷ்யனுக்கு ஞானோபதேசம் பெறும் காலம் கனிந்து வந்தால், குரு தானே வந்து, உபதேசிப்பார் என்னும் தத்வத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

’நாஸம்வத்ஸரவாசீனே ப்ரப்ரூயாத்’ - ஓராண்டு காலம் குருகளின் சேவை செய்யாதவருக்கு, எந்த உபதேசமும் செய்யக்கூடாது என்ற சொலவடை இருப்பதால், நாரதர் வால்மிகிக்கு எப்படி உடனடியாக உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழக்கூடும். மூத்த மகனுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு உண்டு. அதாவது, மூத்த மகன் உபதேசம் பெறுவதற்கு தனது குருவிற்கு ஓராண்டு காலம் சேவை செய்யவேண்டிய அவசியமில்லை. நாரதருக்கு வால்மிகி ரிஷிகள் மூத்த மகனைப் போலவே இருக்கிறார். நாரதருக்கு ப்ருகு ரிஷிகள் சகோதரர். ப்ருகு ரிஷிகளின் மகன் வால்மிகி. ஆக, நாரதருக்கும் வால்மிகி மூத்த மகனாகவே கருதப்படுகிறார். ஆகவே, சேவை இல்லாவிட்டாலும், பாசத்தின் காரணமாக உபதேசம் செய்தார். 

’த்ரிலோகக்ஞ:’ - பூலோக, புவர்லோக, சுவர்லோக என்ற இந்த மூன்று உலகங்களையும் முழுமையாக அறிந்தவர் - அல்லது பத்தலோக, நித்யலோக, நித்யமுக்திலோக என்ற இந்த மூன்று உலகங்களையும் முழுமையாக அறிந்தவர். 

’ஸ்ருத்வா ச’ - வால்மிகியின் பேச்சினைக் கேட்டு என்று பொருள். ’ச’ என்று சொல்வதனால், அவர் கேட்காத / கேட்க நினைத்த கேள்விகளையும்கூட தாமே நினைத்து, அவற்றிற்கும் சரியான பதில் அளித்தார் என்று அறியவேண்டும். 

’ப்ரஹ்ருஷ்ட:’ - சம்பூர்ண ராமாயணத்தை பூலோகத்தில் பரப்புமாறு நாரதரிடம் பிரம்மதேவர் ஆணையிட்டார். அதை வால்மிகிக்கு உபதேசம் செய்வதற்காக நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வந்தார். வால்மிகியும் அதைப் பற்றியே கேள்விகளைக் கேட்டதால், நாரதர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 

No comments:

Post a Comment

ಬಾಲ ಕಾಂಡ ಸರ್ಗ 1 ಸ್ಲೋಕ 5&6

ನನ್ನ ಈ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲು ತಾವೊಬ್ಬರೇ ಸಮರ್ಥರು ಏತದಿಚ್ಛಾಮ್ಯಹಂ ಶ್ರೋತುಂ ಪರಂ ಕೌತೂಹಲಂ ಹಿ ಮೇ   | ಮಹರ್ಷೇ ತ್ವಂ ಸಮರ್ಥೋ ಽ ಸಿ ಜ್ಞಾತ...