Friday, May 4, 2018

பாலகாண்டம் - சர்க்கம் 1 - ஸ்லோகம் #1

ஸ்ரீமத் வால்மிகி ராமாயணம்
பாலகாண்டம் முதல் சர்க்கம்

சர்க்கத்தின் சுருக்கம்:

தம் ஆசிரமத்திற்கு வந்த நாரதரைப் பார்த்து ஆதிகவிகளான வால்மிகி, இந்த உலகத்தில் அனைவரையும்விட உத்தமமானவர் யார்? என்று கேட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நாரதர், இந்த உலகத்தில் அனைவரையும்விட உத்தமமான புருஷர், அனைத்து நற்குணங்களையும் கொண்டவர், ஸ்ரீராமசந்திரனே என்று பதிலளித்தார். மேலும் சுருக்கமாக மொத்த ராமாயணத்தின் சாரத்தையும் வால்மிகி ரிஷிக்கு உபதேசித்தார். ராமாயணத்தைக் கேட்டால் வரும் நற்பலன்களும் இதில் விளக்கப்பட்டுள்ளது. 

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் |
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர்முனி புங்கவம் ||1||

பொருள்:

தவம் மற்றும் வேத அத்யயனங்களில் நாரதர் விற்பன்னர். வேதங்களின் பொருளை அறிந்தவரில் முதன்மையானவர். முனிவர்களில் சிறந்தவர். இத்தகைய ஞானியான நாரதர் நமது ஆசிரமத்திற்கு வந்ததைக் கண்டு வால்மிகி முனிவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரை வரவேற்று மிகுந்த மரியாதையுடன் கேள்விகளைக் கேட்கத் துவங்கினார். 

சிறப்புக் கருத்து:

தமது ஆசிரமத்திற்கு வந்த நாரதரைக் கண்ட வால்மிகி மகரிஷிக்கு மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது. வந்த நாரதருக்கு பூஜைகளைச் செய்து, அவரை இருக்கையில் அமர்த்தி, கேள்விகளைக் கேட்கத் துவங்கினார். அவரது கேள்விகளுக்கு விடையாக நாரதர் ராமாயணத்தை உபதேசிக்கிறார். இப்படி நாரதர் வால்மிகி மகரிஷிக்கு உபதேசித்த ராமாயணத்தை மற்றும் அதன் பாராயணத்தின் பலன்களைப் பற்றி இந்த முதலாம் சர்க்கத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. 

தபஸ்வாத்யாய நிரதம்: 

1. ’தபஸ்வாத்யாயஸ்ச தப: ஸ்வாத்யாயௌ தப: ஸ்வாத்யாயயோ: நிரதம் தபஸ்வாத்யாய நிரதம்’ என்பது இலக்கணக்குறிப்பு. தவம் மற்றும் படிப்பு (ஞானம்) என்கிற இரண்டிலும் நாரதர் சிறந்தவர் என்று பொருள் கொள்ளவேண்டும். ’ஸ்வாத்யாயோ வேததபயோ:’ என்கிற வேத வாக்கின்படி, ஸ்வாத்யாய என்றால் வேதம் என்றே பொருள். தவம் மற்றும் படிப்பு இவை இரண்டும் மிக முக்கியமானதால், துவக்கத்திலேயே இத்தகைய குணங்களைப் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர். 

தபோ வித்யாச விப்ரஸ்ச நி:ஸ்ரேயஸகரம் பரம் |
தபஸா கல்மஷம் ஹந்தி வித்யயா ஞானமஸ்னுதே ||

தவம் மற்றும் கல்வி இவ்விரண்டும் பிராமணருக்கு மோட்ச சாதனைக்கான வழிகளாகும். தவத்தினால் மனதில் உள்ள களங்கங்கள் தூர விலகுகின்றன. கல்வியினால் அவன் தத்வஞானி ஆகிறான். 

2. தவம் என்னும் சொல்லிற்கு ஞானம் என்று பொருள். ‘தப ஆலோசனே’ என்னும் வாக்கியத்திலிருந்து வந்த சொல் ஆகையால்; மற்றும் ‘யஸ்ய ஞானமயம் தப:’ என்று வேத வாக்கியம் சொல்வதாலும்; தவம் என்னும் சொல்லிற்கு ஞானம் என்று பொருள் கொள்ளலாம். ஸ்வாத்யாய என்னும் சொல்லிற்கு வேதம் என்று பொருள். ஆகையால், ஞானம் மற்றும் வேத- அத்யயனங்களில் சிறந்தவர் என்னும் பொருள் வருகிறது. 

3. ’தபோ ஹி ஸ்வாத்யாய:’ என்னும் வேத வாக்கியம், வேத அத்யயனமே தவம் என்று சொல்கிறது. ’ஸ்வாத்யாயோ வேத ஜபயோ:’ என்பது போல ஸ்வாத்யாய என்னும் சொல் ஜபம் என்னும் பொருளில் வருகிறது. ஆகையால் ‘ஸ்வாத்யாயாத் மா ப்ரமத:’ (தைத்திரிய உபநிஷத்) ‘வேதமேவ ஜபந்நித்யம்’ என்று சொல்வதைப்போல வேத அத்யயனம் மற்றும் ஜபங்களில் சிறந்தவர் என்று பொருள். 

4. ’தபஸ்வேன ஷ்ருத: ஸ்வாத்யய: தப:ஸ்வாத்யாய:’ வேத அத்யயனத்தையே தவமாகக் கருதி செய்துவருபவர் என்பது இன்னொரு பொருள். முனிபுங்கவ என்று சொன்னதிலேயே, தவம் செய்பவர்களில் முதன்மையானவர் என்று பொருள் வருவதால், இங்கிருக்கும் தவம் என்னும் சொல்லிற்கு, ஸ்வாத்யாயத்தையே தவம் என்று சொல்லவேண்டும். ‘தபஸ்ச ஸ்வாத்யாயஸ்ச தபஸ்வாத்யாயௌ’ என்று இரு சொற்களையும் சேர்த்து பொருள் கொள்ளக்கூடாது. ‘வாக்விவிதாம் வரம்’ வேத அத்யயனங்களைச் செய்துவிட்டு, பிறருக்கு உபதேசம் செய்யாதிருந்தால், அவர் செய்த அத்யயனம் வீணே - என்பது இந்த வாக்கியத்திலிருந்து தெரியவருகிறது. 

யததீதமவிக்ஞாதம் நிகதேன்யைவ ஷப்தைதே |
அனக்னாவிவ ஷுஷ்கைதோ ந தஜ்வலதி கர்ஹிசித் ||

விறகுக்கட்டை உலர்ந்திருந்தாலும், அணைந்துபோன நெருப்பு அதை சுடுவதில்லை. அதுபோல வேதங்களைப் படித்து, அதன் பொருளை அறியாமல் சொற்களை மட்டும் மனப்பாடம் செய்து, அதையே பிறருக்கு உபதேசம் செய்தால் அது சரியான பலனைக் கொடுப்பதில்லை. அத்தகையவர்களிடம் எந்த சக்தியும் இருப்பதில்லை. மேலும், அவர் படித்ததும் வீணே எனலாம். ஆகையால், தமக்குத் தெரிந்ததை மற்றவருக்கு கண்டிப்பாக உபதேசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாரதர் முதன்மையானவர் என்று ’வாக்விதாம் பரம்’ என்ற சொல்லின்மூலம் விளக்குகிறார். வாக் என்றால் வேதம் என்று பொருள். ‘அனாதினிதனா ஹ்யேஷா வாகுத்ஸ்ருட்வா ஸ்யம்புவா’ என்னும் வாக்கியம் வாக் என்னும் சொல்லை வேதம் என்ற பொருளில் சொல்லி, இந்த வேதத்தைக் கற்றுக்கொடுப்பவர் ‘வாக்விதர்’. இவரில் சிறந்தவர் நாரதர். வாக்விதாம் என்பதில் ஆறாம் வேற்றுமைஉருபு வந்து தேவையான பொருளைத் தருகிறது. 

5. வாக் என்னும் சொல்லுக்கு இலக்கணம் என்றும் பொருள் உண்டு. வேதங்களின் ஆறு பகுதிகளையும் நன்று அறிந்தவர்களில் நாரதர் முதன்மையானவர் என்று பொருள் வருகிறது. ஆகையால் நாரதர் ‘வாக்விஷாரதர்’ எனப்படுகிறார். 

முனிபுங்கவம் - 
1. நற்சிந்தனை செய்பவர்களில் நாரதர் சிறந்தவர் என்று பொருள்.
2. முனி என்றால் ஞானி என்று பொருள். அவர்களில் சிறந்தவர் நாரதர்.

தப:ஸ்வாத்யாயநிரதம் என்றால் கேட்டல், வாக்விதாம் என்றால் சிந்தித்தல், முனிபுங்கவம் என்றால் உணர்தல் என்று அறியவேண்டும். கேட்டல், சிந்தித்தல், உணர்தல் ஆகிய மூன்றையும் கற்றுத் தேர்ந்தவர் நாரதர். 

நார என்னும் சொல்லிற்கு ஞானம் மற்றும் அஞ்ஞானம் என்று இரு பொருளும் உண்டு. நாரம் - ஞானத்தைக் கொடுப்பதால் நாரதன் ; நாரம் - அஞ்ஞானத்தைக் கண்டிப்பதால் நாரதன் - என்று இரு விதமாக இவரின் பெயரை விளக்கலாம். 

நாரதம் - நரனுக்கு சம்பந்தப்பட்டவர் நாரதர் - அஞ்ஞானத்தைக் கண்டிப்பவர் ஆகையால் நாரதர். ‘தோ அவகண்டனே’ என்னும் வாக்கியத்தில் தோ என்னும் சொல்லிற்கு நாசம் செய்வது என்று பொருள். மனிதர்களிடம் இருக்கும் அஞ்ஞானத்திற்கு ‘நார’ என்று பெயர். இந்த அஞ்ஞானத்தைப் போக்குவதால் ‘நாரத’ என்று அழைக்கப்பட்டார். 

நாரதர் அஞ்ஞானத்தைப் போக்குகிறார் என்னும் விஷயம், நாரத புராணத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. 

காயன் நாராயணகதாம் சதா மாயபயாபஹாம் |
நாரதோ நாஷயன்னேதி ந்ருணாம் அஞ்ஞானஜம் தம: ||

அஞ்ஞானம் மற்றும் பயங்களைப் போக்கும் நாராயணனின் கதையை எந்நேரமும் பாடியவாறும், மனிதனின் அஞ்ஞானத்தால் வரும் பாவங்களைப் போக்கியும், நாரதன் என்னும் தன் பெயருக்கு ஏற்ப நடந்துகொண்டார். 

இங்கு கவனிக்கவேண்டிய விஷயம்:

‘தம் யதா யதா உபாசதே ததேவ பவதி’ என்கிற உபநிஷத்தின் வாக்கியத்தின்படி, நாரதர், ஸ்ரீஹரியை அஞ்ஞானம் மற்றும் பயங்களைப் போக்குபவர் என்று வேண்டுகிறார். ஆகையால், அவருக்கும் மனிதர்களிடம் இருக்கும் அஞ்ஞானம் மற்றும் பயங்களைப் போக்கும் திறன், ஸ்ரீஹரியிடமிருந்து வந்தது. 

மனிதர்களுக்கு சம்பந்தப்பட்ட ஞானத்திற்கு நார என்று பெயர். அந்த ஞானத்தை ததாதி - கொடுப்பதால் நாரதர் என்று பெயர் பெற்றார். ஆகையால், நாரதர் அனைவருக்கும் குருவாக இருக்கிறார். 

3. மகாபாரதத்தில் வேதவியாசர் கூறியதாவது:

நரதீதி நர: ப்ரோக்த: பரமாத்ம சனாதன: |
ச ஏவ நார; தம் ததாதீத்யுபதிஷதீதி நாரதஸ்தம் ||

நரதி - என்றால் நற்கதியைக் கொடுக்கிறார் என்று பொருள். ஆகையால் ஸ்ரீஹரிக்கு நர என்று பொருள். 
நர ஏவ நார; ஆகையால் நார: என்றால் ஸ்ரீஹரி என்று பொருள். 
தம் ததாதி உபதிஷதி - அவரைப் பற்றி உபதேசம் செய்வதன் மூலம் அவரை அறிமுகப்படுத்துகிறார். 
ஆகையால், நாரத என்று நாரதர் பெயர் பெற்றார். 

‘நரதி சத்கதிம் ப்ராபயதி இதி நாரத:’ நற்கதியைக் கொடுப்பவராகையால் நாரத என்று பெயர்.

1. தபஸ்வி - சிஷ்யரான வால்மீகியின் லட்சணங்களை இந்தச் சொல் விளக்குகிறது. ’தப: அஸ்ய அஸ்தீதி தபஸ்வீ’ என்பது இலக்கணக் குறிப்பு. சிறந்த தவங்களைச் செய்தவர் என்று பொருள் வருகிறது. 

2. முக்கியமான மற்றும் இதர தவங்கள் என அனைத்தையுமே செய்தவர் என்று அடுத்த பொருள். ‘மனசஸ்சேந்திரியாணஸ்ச ஏகாக்ரம் பரமம் தப:’ என்று சொல்வதைப் போல மனம் மற்றும் இந்திரியங்களை ஒருமைப்படுத்துவதே (கட்டுப்படுத்துவதே) சிறந்த தவம் ஆகும். க்ருச்ர சாந்த்ராயண ஏகாதசி உபவாசம் ஆகியவற்றைச் செய்வதே முக்கியமான தவம் ஆகும். இவ்விரண்டு தவங்களையும் செய்தவர் என்று பொருள். 

வால்மீக: - வல்மீகஸ்ய அபத்யம் வால்மீகி: என்பது இலக்கணம். புற்றிலிருந்து பிறந்ததால் இவருக்கு வால்மிகி என்று பெயர் வந்தது. வால்மிகி, ப்ருகு ரிஷியின் மகன் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது. ‘புத்ரோபூத் பார்கவஸ்தஸ்மாத் வால்மீகிர்யோபிதீயதே’ என்று உள்ளது. ராமாயணத்திலும்கூட ’பார்கவேணேதி சம்ஸ்க்ருதௌ பார்கவேண தபஸ்வினா’ என்று ப்ருகுவின் மகன் என்று வருகிறது. இன்னொரு இடத்தில் ‘சக்ரே ப்ரசேதஸ: புத்ரஸ்தம் பிரம்ஹாப்யன்வமன்யதே’ என்று பிரசேதசரின் மகன் என்கின்றனர். ‘வேத: ப்ராசேதஸாதாசீத்’ என்னும் வாக்கியம்கூட இதற்கு ஆதாரமாக உள்ளது. இப்படியிருக்கும்போது, புற்றிலிருந்து பிறந்தார் என்று ஏன் சொல்லவேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை இப்படி சொல்லலாம். 

ப்ரசேதசன் என்று அழைக்கப்படும் வருணன், மழையைப் பொழிந்து புற்றிலிருந்து மேலெழுந்து வருமாறு செய்தார். ஆகையால் ப்ரசேதனின் மகன் என்பதற்கும், புற்றிலிருந்து பிறந்தார் என்பதற்கும் வேறுபாடு இல்லை என்று சொல்லலாம். மேலும் ப்ருகு ரிஷிகளின் மூலம் பிறந்ததால் ப்ருகுவின் மகனானார் என்றும் சொல்ல வேண்டும். 

இப்படி வால்மிகி என்னும் பெயரிலிருந்தே வால்மிகி மகரிஷிக்கு சம, தம ஆகிய நற்குணங்கள் இருந்தன என்று தெரியவருகிறது. ஆகையால், ராமாயண உபதேசத்திற்கு வால்மிகி மகரிஷியானவர் தகுதி பெற்றிருந்தார் என்றும் அறியலாம். 

’பரிபப்ரச்ச’ - மிகுந்த மரியாதையுடன் கேள்விகளைக் கேட்டார் என்று பொருள். ‘தத் விக்ஞானார்த்தம் ஸ குருமேவ அபிகச்சேத்’ என்று சொன்னதால், விதிமுறைப்படி நாரதரை, குருவாக வரித்து அவரை அழைத்து, கேள்வி கேட்டார் என்று பொருள். 

***

No comments:

Post a Comment

ಬಾಲ ಕಾಂಡ ಸರ್ಗ 1 ಸ್ಲೋಕ 5&6

ನನ್ನ ಈ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲು ತಾವೊಬ್ಬರೇ ಸಮರ್ಥರು ಏತದಿಚ್ಛಾಮ್ಯಹಂ ಶ್ರೋತುಂ ಪರಂ ಕೌತೂಹಲಂ ಹಿ ಮೇ   | ಮಹರ್ಷೇ ತ್ವಂ ಸಮರ್ಥೋ ಽ ಸಿ ಜ್ಞಾತ...